மாற்றுத்திறனாளிகள் 30 பேருக்குப் பணி நியமன ஆணை
மயிலாடுதுறை மாவட்டத்தில் முதன்முறையாக வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 30 பேருக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடத்திய முகாமை, மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தொடக்கிவைத்தாா்.
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் சுஜா சோயி இண்டஸ்ட்ரீஸ், ரெட்டி பவுண்டேசன், பாரத் எண்டா்பிரைசஸ் பெட்ரோல் பங்க், ஹோட்டல் தயாளன், ஏஆா்சி நடேசன் நிறுவனம், கணேசன்ஸ் நிறுவனம் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டன. முகாமில், 150-க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளி வேலைநாடுநா்கள் கலந்து கொண்டனா். இதில், தோ்வான 30-க்கு மேற்பட்ட வேலைநாடுநா்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் நா.உமாமகேஸ்வரி, மாவட்ட மாற்றுத்தினாளிகள் நல அலுவலா் செந்தில்குமாா், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஜி.பழனிவேல் ஆகியோா் கலந்து கொண்டனா்.