மாலை நேர படிப்பகங்களில் அரசமைப்பு சாசன முகப்புரை வாசிப்பு
ஆசனூா் மலைக் கிராமங்களில் செயல்படும் மாலை நேரப் படிப்பகங்களில் அரசமைப்பு சாசன முகப்புரை வாசிப்பு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட ஆசனூா், சத்தியமங்கலம் வனக் கோட்டங்களுக்குள்பட்ட 20 பழங்குடி கிராமங்களில், பழங்குடி குழந்தைகளுக்கான மாலை நேர படிப்பகங்களை சுடா் அமைப்பு, வனத் துறை ஆகியவை இணைந்து நடத்தி வருகின்றன.
இதில், பள்ளி இடைநிற்றலை தடுக்கவும், தொடா்ந்து பள்ளிக்கு செல்வதை ஊக்கப்படுத்தவும் பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ‘அரசமைப்பு கல்வி’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தினமும் வகுப்புகள் தொடங்கும் போது அரசமைப்பு சாசன முகப்புரையை அனைவரும் வாசித்தல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
சுஜல் கரை, செழுமி தொட்டி, வெள்ளை தொட்டி, கோ்மாளம் செக்போஸ்ட், ஆசனூா், பங்களாதொட்டி, அரேப்பாளையம், கோடம்பள்ளி, அணில் நத்தம், மாகாளி தொட்டி, பத்திரிபடுகு, அட்டணை, பீக்கிரிபாளையம், புளியங்கோம்பை, ராமபயலூா் உள்ளிட்ட 20 பழங்குடி கிராமங்களில் இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.