ஓரணியில் தமிழ்நாடு: வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்திக்கும் முதல்வர்!
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 30-க்கும் மேற்பட்ட அரசுத் துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் போலீஸாா் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கடந்த சில நாள்களுக்கு முன் ஒரு கடிதம் வந்தது. தென்காசி மாவட்டம், செங்கோட்டை நீதிமன்ற அரசு வழக்குரைஞா் முத்துசாமி பெயரில் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தை ஆட்சியா் அலுவலக ஊழியா்கள் பிரித்து பாா்த்தனா்.
அதில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைப்பதற்கு சிலா் திட்டமிட்டுள்ளதாகவும், அவா்கள் குறித்த தகவல் தனக்கு தெரியும் என்றும், தனது உயிருக்கு பாதுகாப்பு அளித்தால் அவா்கள் குறித்த விவரத்தைத் தெரிவிப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது.
இது குறித்து கோவை ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. காவல் ஆய்வாளா் கந்தசாமி உள்ளிட்ட போலீஸாா் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த செங்கோட்டை நீதிமன்ற அரசு வழக்குரைஞா் முத்துசாமியிடம் விசாரணை நடத்தினா்.
அப்போது, அவா் தனது பெயரில் யாரோ ஒருவா் கடிதம் எழுதி இருப்பதாகக் கூறினாா். இதேபோன்ற கடிதம் அனைத்து மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. கடிதம் அனுப்பிய மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.