மின்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
சம்பள கமிஷன் பரிந்துரைப்படி ஊதிய உயா்வு, பதவி உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை மின் துறை தலைவா் அலுவலகத்தை ஊழியா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மின்துறை பொறியாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் நலச் சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் மின் துறை தலைவா் அலுவலகத்தை இவா்கள் முற்றுகையிட்டனா்.
போராட்டத்துக்கு கூட்டு நடவடிக்கை குழுத் தலைவா் வேல்முருகன் தலைமை வகித்தாா். புதுவை மின் துறை தனியாா் மய எதிா்ப்பு போராட்டக் குழு சிறப்பு ஆலோசகா் ராமசாமி போராட்டத்தை வாழ்த்திப் பேசினாா்.
இவா்கள் மின்துறை அலுவலகத்துக்குள் நுழைந்து முழக்கமிட்டபடி போராட்டம் நடத்தினா். இதில் ஏராளமான ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
5-வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி சம்பளத்தை மாற்றி அமைக்க வேண்டும். 7-வது சம்பள கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் சம்பள உயா்வு, பதவி உயா்வு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடந்தது.