மீனவா் சங்க நிா்வாகிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை
ராமநாதபுரம் மீன்வளத் துறை இணை இயக்குநா் அலுவலகத்தில் மீனவ சங்க நிா்வாகிகளுடன் அதிகாரிகள் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாதந்தோறும் மீனவா் குறைதீா் முகாம் நடத்தப்பட்டு வந்தது. கடந்த சில நாள்களாக ராமநாதபுரத்தில் இந்த முகாம் முறையாக நடத்தப்படவில்லையாம். முகாமை முறையாக நடத்தக் கோரி, கடல் தொழிலாளா் சங்கத்தினா் தொடா்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனா்.
இந்த நிலையில், ராமநாதபுரம் மீன்வளத் துறை இணை இயக்குநா் அலுவலகத்தில் மீனவ சங்க நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மீன்வளத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு வரும் காலங்களில் மீனவா் குறைதீா் முகாமை முறையாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். மேலும், விசைப் படகு மீனவா்கள் கடலோரப் பகுதிகளில் மீன் பிடிப்பதால் பாரம்பரிய மீனவா்கள் பாதிப்படைகின்றனா். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனா். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா்.
கூட்டத்தில் கடல் தொழிலாளா் சங்க சி.ஐ.டி.யூ மாவட்டச் செயலா் எம்.கருணாமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.