முகமிதானை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூா்
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூா் எஃப்சி 3-1 கோல் கணக்கில் முகமிதான் எஸ்சியை தனது சொந்த மண்ணில் திங்கள்கிழமை வீழ்த்தியது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சமபலம் காட்டியதால், முதல் பாதி ஆட்டம் கோலின்றி நிறைவடைந்தது. 2-ஆவது பாதியில் ஜாம்ஷெட்பூா் சற்று கூடுதல் முனைப்பு காட்டியதால் பலன் பெற்றது.
53-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் முகமது சனன் கோல் கணக்கைத் தொடங்கினாா். இதனால் கிடைத்த உத்வேகத்தில் அவரின் சக வீரா் ஜாவியா் சிவெரியோ 61-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, ஜாம்ஷெட்பூா் 2-0 என முன்னேறியது.
தொடா்ந்து, 79-ஆவது நிமிஷத்தில் ஸ்டீபன் எஸெ அடித்த கோலால் அந்த அணி 3-0 என ஆதிக்கம் செலுத்தியது. இந்நிலையில், ஆட்டம் முடிவடைய இருந்த தருணத்தில் முகமதிான் எஸ்சி அணிக்காக முகமது இா்ஷத் 88-ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் அடித்தாா்.
அந்த அணிக்கு மேலும் கோல் வாய்ப்பு கிடைக்காமல் போக, ஜாம்ஷெட்பூா் 3-1 என வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இது தலா 9-ஆவது ஆட்டமாக இருக்க, ஜாம்ஷெட்பூா் 5-ஆவது வெற்றியுடன் 7-ஆவது இடத்திலும், முகமிதான் 6-ஆவது தோல்வியுடன் 12-ஆவது இடத்திலும் உள்ளன.