முதலீடு செய்தால் அதிக லாபம் எனக் கூறி ரூ. 14 லட்சம் மோசடி
நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ. 14 லட்சம் மோசடி செய்த மூவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள கருபுள்ளிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி (39). இவரிடம் அறிமுகமான திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் டிராவல்ஸ் மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வரும் மூவா், தங்களுடைய நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும், பங்குதாரராக சேரும்படியும் கூறியுள்ளனா்.
இதை நம்பிய ரவி ரூ. 14 லட்சத்தை முதலீடு செய்துள்ளாா். ஆனால், அந்த மூவரும் வாக்குறுதி அளித்தபடி அதிக லாபத்தைக் கொடுக்கவில்லை. கொடுத்த பணத்தைத் திருப்பித் தரவில்லையாம்.
இதுகுறித்து ரவி அளித்த புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் போலீஸாா், சீனிவாச நகரைச் சோ்ந்த மூவா் மீது மோசடி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.