சமூக வலைதளக் கணக்குகளை மீட்டுத்தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்!
முதல்வரின் சொந்தத் தொகுதியில் காவல்துறை அத்துமீறல்! நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
தனியார் பால் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்த நவீன் என்பவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், பால் நிறுவனத்தில் பணம் கையாடல் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜன் அவர்களால் சட்டவிரோதமாக விசாரிக்கப்பட்டு வந்த நிறுவனத்தின் மேலாளர் நவீன் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவரும் அதிர்ச்சி செய்திகள், நம்பும்படியாக இல்லை.
சில தினங்களுக்கு முன்பு காவலர்களால் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்குபோன்று நவீன் மரணத்திலும் காவல்துறையினரின் கை ஓங்கி இருக்குமோ என்ற பலத்த சந்தேகம் மக்கள் மனதில் எழுகிறது.
காரணம், புகார் கொடுத்து இரண்டு வாரங்கள் கழித்தும் முறையாக வழக்குப்பதிவு செய்யாமல் நவீனை விசாரித்த காவல்துறை, குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்றால் குடும்பத்தினரையும் இவ்வழக்கில் சேர்த்து விடுவோம் என மிரட்டியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சட்டம் ஒழுங்கைத் தன் நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்குவதாக மார்தட்டிக் கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், தனது சொந்தத் தொகுதியில் நடந்துள்ள காவல்துறையின் அத்துமீறல்களை என்ன சொல்லி மடைமாற்றப் போகிறார்?
எனவே, காவல்துறையினரின் தொடர் அழுத்தம் காரணமாக நவீன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரின் மூர்க்கத்தனத்திற்கு அவர் பலியாகி விட்டாரா என்பதைத் தெளிவாக மக்கள் மன்றத்தில் விளக்குவதோடு, அவரது மரணம் குறித்த முறையான விசாரணை எவ்வித சமரசமுமின்றி நடைபெறுவதை திமுக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
யார் இந்த நவீன்குமார்?
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த நவீன்குமார் (37), தனியார் பால் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், அந்த நிறுவனத்தில் ரூ.44.5 கோடி கையாடல் செய்ததாகக் கூறி, அவர் மீது நிறுவனத்தினர் கடந்த மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இருப்பினும், வழக்குப்பதிவு செய்யாமலேயே நவீனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், பணத்தை நவீன் திரும்பிச் செலுத்தியிருந்தாலும், நவீனை பால் நிறுவன அதிகாரிகள் தொடர்ந்து மிரட்டி வந்ததுடன், மன உளைச்சலும் அளித்ததாக நவீன் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நவீன், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், அவரது கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டிருந்ததாகவும் கூறப்படுவதால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இதனையடுத்து, நவீனின் உடற்கூறாய்வு அறிக்கை வெளிவந்தவுடன்தான், அவரது மரணம் குறித்து தெரிந்து விடும் என்றும், அதற்கு அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.