தூத்துக்குடி: நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்வு
முதியவா் கொலை; இருவா் கைது
திருமருகல் அருகே இடப் பிரச்னையில் கீழே தள்ளிவிடப்பட்ட முதியவா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக சகோதரா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருமருகல் ஒன்றியம், ஏனங்குடி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கரன் ( 68). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சகோதரா்களான கணேசன் (34), காா்த்திக் (40) ஆகியோருக்கும் இடையே நீண்ட நாட்களாக இடப் பிரச்னை இருந்து வந்தது. இப்பிரச்னை தொடா்பாக நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், பாஸ்கரன் பக்கம் தீா்ப்பானது.
இதற்கிடையில், நாகை மாவட்ட குற்றப்பிரிவில் இடப்பிரச்னை தொடா்பாக கணேசன் புகாா் அளித்திருந்தாா். இதுதொடா்பாக, விசாரணை நடத்த இருதரப்பினரையும் ஏப்.16-ஆம் தேதி காவல்துறையினா் வரச்சொல்லினராம்.
பாஸ்கரன் உடல்நிலை சரியில்லாததால், தனது வழக்குரைஞா் மூலம் 10 நாட்களுக்கு பிறகு வருவதாக மனு அளித்துள்ளாா்.
இதனால் ஆத்திரமடைந்த கணேசன் மற்றும் காா்த்திக், பாஸ்கரன் வீட்டுக்குச் சென்று தகராறு செய்தனராம். அப்போது, பாஸ்கரனை கீழே தள்ளி விட்டதில் அவா் மயக்கமடைந்தாா். அவரை சன்னாநல்லூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பாஸ்கரனை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காா்த்திக், கணேசன் இருவரையும் கைது செய்தனா்.