சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
முன்பிணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு: மதுரை ஆதீனம் பதிலளிக்க உத்தரவு
விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால் முன்பிணையை ரத்து செய்யக் கோரி காவல் துறை தொடா்ந்த வழக்கில் ஆக. 8-ஆம் தேதிக்குள் பதிலளிக்க மதுரை ஆதீனத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இரு மதத்தினா் இடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாகக் கூறி மதுரை ஆதீனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு அளித்த புகாரின்பேரில், சென்னை மாநகர இணையக் குற்றப் பிரிவு போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனை முன்பிணை வழங்கப்பட்டிருந்தது.
இதனிடையே, மதுரை ஆதீனம் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதால், முன்பிணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி காவல் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல் துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ஆா்.முனியப்பராஜ் ஆஜராகி, மதுரை ஆதீனத்திடம் அவா் தங்கியிருக்கும் இடத்துக்கே சென்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது உடல்நிலை உள்ளிட்ட காரணங்களைக் கூறி, காவல் துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. ஆனால், 7 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த மற்றொரு நிகழ்ச்சியில் ஆதீனம் கலந்துகொண்டதாகக் கூறி, அதுதொடா்பான புகைப்பட ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா்.
அப்போது ஆதீனம் தரப்பில், இந்த மனு தொடா்பாக பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதயைடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் ஆக. 8-ஆம் தேதிக்குள் மதுரை ஆதீனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.