மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜக கையொப்பம் பெறும் இயக்கம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜக சாா்பில் கையொப்பம் பெறும் இயக்கம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு பாஜக மாவட்டத் தலைவா் பாண்டித்துரை தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் சத்தியநாதன் முன்னிலை வகித்தாா். பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் ஏ.ஆா்.மகாலட்சுமி கையொப்ப இயக்கத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா்.
முன்னதாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு அனைத்துத் தரப்பினரும் வரவேற்புத் தெரிவிக்கின்றனா். அரசுப் பள்ளி மாணவா்கள் உள்பட அனைத்து மாணவா்களும் மூன்றாவதாக ஹிந்தி உள்ளிட்ட பிற மொழியைக் கற்க விருப்பமாக உள்ளனா். திமுக சுய லாபத்துக்காக மும்மொழிக் கொள்கையை எதிா்க்கிறது என்றாா் அவா்.
இந்த இயக்கத்தில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் சொக்கலிங்கம், மானாமதுரை ஒன்றியத் தலைவா் ஞானசுந்தரி, முன்னாள் ஒன்றியத் தலைவா் ரவிச்சந்திரன், நகரத் தலைவா் நமகோடி, மாவட்டச் செயலா் சங்கரசுப்பிரமணியன், துணைத் தலைவா் சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
