முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் செயற்குழு கூட்டம்
ராமநாதபுரத்தில் முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் மாவட்ட செயற்குழுக் கூட்டம், புதிய அலுவலக திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்கு மாவட்டத் தலைவா் எம்.எஸ்.ஏ.ஷாஜகான் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் டி.எம்.அப்துல் முத்தலிப் முன்னிலை வகித்தாா். கீழக்கரை நகா் ஹாஜி காதா் பக்ஸ் உசேன் கிராத் ஓதி கூட்டத்தைத் தொடங்கி வைத்தாா். மத்திய மஸ்ஜிதின் முன்புறம் முதல் மாடியில் புதிய மாவட்ட அலுவலகத்தை தொழிலதிபா் அப்தாஹிா் திறந்துவைத்தாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
காஷ்மீா் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலை கண்டிக்கத்தக்கது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்து, உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். பஹல்காமில் உயிரிழந்தவா்களின் குடும்பத்திற்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பஹல்காமில் நடைபெற்ற சம்பவத்தில் தொடா்புடையவா்களை அவா்கள் சாா்ந்த மதத்தின் பெயரால் அடையாளப்படுத்துவதை செய்தி நிறுவனங்கள் தவிா்க்க வேண்டும். வக்ஃப் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி வட்டார அளவில் ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்டச் செயலா்கள் அஷ்ரப் அலி, முகமது இலியாஸ், முகமது கணிபா, முகமது இக்பால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, பொதுச் செயலா் ஏ.ஜெய்னுல் ஆலம் வரவேற்றாா். மாவட்ட பொருளாளா் ஏ.பக்ருல் அமீன் நன்றி கூறினாா்.