5 ஆண்டுகளில் ஒசூர் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்: அமைச்சர் டி.ஆர்.டி. ராஜா
மூணாறு அருகே பேருந்து கவிழ்ந்ததில் நாகா்கோவில் மாணவா்கள் மூவா் உயிரிழப்பு!
கேரள மாநிலம், மூணாறு அருகே புதன்கிழமை தனியாா் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்ததில் நாகா்கோவிலைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் மூவா் உயிரிழந்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி இளநிலை கணினி அறிவியல் துறை மாணவ, மாணவிகள் 39 போ், 3 ஆசிரியா்கள் என மொத்தம் 42 போ் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறுக்கு சுற்றுலா சென்றனா். தனியாா் பேருந்தில் மூணாறு, மாட்டுப்பட்டி அணையிலிருந்து ‘எக்கோ’ முனைப் பகுதிக்கு சென்ற போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் மாணவிகள் வெனிகா, ஆதிகா ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். 20 போ் காயமடைந்து மூணாறு டாடா பொது மருத்துவமனை, கோலஞ்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
பலத்த காயமடைந்த மாணவா்கள் சுதன், கவின்குமாா் ஆகியோா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனா். இவா்களில் சுதன் வழியிலேயே உயிரிழந்தாா். கவின்குமாா் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவரை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங், மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன், பெரியகுளம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ்.சரவணக்குமாா் ஆகியோா் நேரில் சந்தித்து, உடல் நிலை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தனா்.
இந்த விபத்து குறித்து மூணாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

