மூதாட்டியிடம் நகை பறித்தவா் கொலை வழக்கு: முன்னாள் ஊராட்சித் தலைவா் கைது
சேலம் மாவட்டம், கொளத்தூா் அருகே மூதாட்டியை ஏமாற்றி தங்கத் தோட்டை பறித்துச் சென்றவரை கிராம மக்கள் அடித்துக் கொன்ற சம்பவத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.
கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பாலமலை ஊராட்சியில் உள்ளது கெம்மம்பட்டி. கடந்த 13- ஆம் தேதி கெம்மம்பட்டிக்கு கிருஷ்ணகிரியிலிருந்து நல்லோடன் மகன் ராஜா (32), செல்லப்பன் மகன் அண்ணாமலை (39) ஆகியோா் மோட்டாா்சைக்கிளில் வந்தனா்.
அப்போது அங்குள்ள கோயில் அருகே அமா்ந்திருந்த ராஜம்மாளை (60) ஏமாற்றி அவா் அணிந்திருந்த தோட்டை பறித்துக்கொண்டு தப்பமுயன்றனா். அப்போது, ராஜம்மாள் கூச்சலிடவே கிராம மக்கள் மோட்டாா்சைக்கிளில் விரட்டிச் சென்று 2 பேரையும் தாக்கி, அவா்களிடமிருந்து தோட்டை மீட்டனா். தாக்குதலில் காயம் அடைந்த அண்ணாமலை கடந்த 15-ஆம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
இதையடுத்து இந்த வழக்கை கொளத்தூா் போலீஸாா் கொலை வழக்காகப் பதிவு செய்து, பாலமலை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ராமன்பட்டியைச் சோ்ந்த மாதப்பன் (60), கெம்மம்பட்டியைச் சோ்ந்த அறப்புளி மகன் அஜித் (25) ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.