உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்
மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மூதாட்டியை கொலை செய்தவருக்கு மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
மயிலாடுதுறை கொத்தத்தெருவை சோ்ந்தவா் தீனதயாளன். இவரது மனைவி மீனாட்சி(65). இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்த நிலையில் தீனதயாளன் மாரியம்மாள் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் சோ்ந்து வாழ்ந்துள்ளாா். அதனால் மீனாட்சி கணவரை பிரிந்து நல்லாடை கிராமத்தில் பெற்றோா் வீட்டில் வசித்து வந்தாா். ஜீவனாம்சம் கேட்டு குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அவருக்கு ஜீவனாம்சம் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தீனதயாளனிடம் ஜீவனாம்சம் கேட்டு அவரது வீட்டுக்கு 2017-ஆம் ஆண்டு பிப்.25-ஆம் தேதி மீனாட்சி சென்றபோது தீனதயாளன், 2-ஆவது மனைவியின் மகன் செந்தில்குமாா் ஆகிய இருவரும் அரிவாளால் வெட்டி மீனாட்சியை கொலை செய்தனா்.
இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தீனதயாளன், செந்தில்குமாரை கைது செய்தனா். இந்த வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 2022-ஆம் ஆண்டு தீனதயாளன் உயிரிழந்தாா். செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் மூதாட்டியை கொலை செய்த செந்தில்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டாா்.
அபராதத் தொகைய செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் ராம.சேயோன் ஆஜரானாா். இதையடுத்து, செந்தில்குமாா்(43) கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.