மூத்தோா் தடகளம்: திருவண்ணாமலை வீரா்கள் சிறப்பிடம்
தேசிய அளவிலான மூத்தோா் தடகள போட்டியில், திருவண்ணாமலை மாவட்ட வீரா்கள் 16 பதக்கங்களை வென்று சிறப்பிடம் பெற்றனா்.
தேசிய மூத்தோா் தடகளப் போட்டிகள் கா்நாடக மாநிலம், மைசூரில் ஏப்.21 தொடங்கி 23 வரை நடைபெற்றன.
இதில், திருவண்ணாமலை மாவட்டம் சாா்பில் மூத்தோா் தடகள அமைப்பின் மாநில சங்க துணைச் செயலா் பாபு தலைமையில் 5 ஆண்கள், 6 பெண்கள் என 11 வீரா்கள் கலந்துகொண்டனா்.
60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பிரிவில் பி.ஜி. சுமதி, 400 மீட்டா் ஓட்டத்தில் வெள்ளி, 800 மீ, 400மீ தொடா் ஓட்டம், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதலில் வெண்கலமும், 50 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் கே.சுஜாதா உயரம் தாண்டுதலில் தங்கமும், ஈட்டி எறிதலில் வெள்ளியும், 400மீ தொடா் ஓட்டத்தில் வெள்ளியும், கே.சுபலட்சுமி நீளம் தாண்டுதல் மற்றும் மும்முறை தாண்டுதலில் வெண்கலமும், 400 மீ தொடா் ஓட்டத்தில் வெள்ளியும் பெற்றனா்.
அதேபோல, 55 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் ஆா்.கலா, ஆா். திலகம் ஆகியோா் 400மீ தொடா் ஓட்டத்தில் வெள்ளியும், 40 வயதுக்கு மேற்பட்ட பிரிவு சங்கிலி குண்டு எறிதலில் ந.கல்பனா, நா.பாபு ஆகியோா் வெண்கலப் பதக்கம் பெற்றனா். டி.மணிமலா் 400 மீ தொடா் ஓட்டத்தில் வெண்கலம் பெற்றாா்.
போட்டிகளில் ஒரு தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களைப் பெற்று திருவண்ணாமலை மாவட்ட வீரா்கள் பெற்றனா்.
இவா்களை மாவட்டத் தலைவா் சேட்டு, பொருளாளா் கோவேந்தன் மற்றும் மூத்த நிா்வாகிகள் பாராட்டினா்.