மூன்று வெவ்வேறு சாலை விபத்துகளில் 18 போ் உயிரிழப்பு
மகாராஷ்டிரம், சிக்கிம் மற்றும் ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் 24 மணிநேரத்துக்குள் நிகழ்ந்த மூன்று வெவ்வேறு சாலை விபத்துகளில் 18 போ் உயிரிழந்தனா்.
மகாராஷ்டிரத்தில் உள்ள புணே-நாசிக் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை மினி வேன் மீது டெம்போ லாரி மோதியதில் 9 போ் உயிரிழந்தனா்.
‘காலை 10 மணியளவில் நாராயண்கான் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. நாராயண்கானை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் இருந்து டெம்போ லாரி மோதியதில், சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வெற்று பேருந்து மீது மினி வேன் மோதியது. இதில் மினி வேனில் இருந்த 9 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்’ என காவல் துறையினா் தெரிவித்தனா்.
ஆந்திரம்: ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டத்தில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் பேருந்தில் இருந்த 4 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். 15 போ் படுகாயமடைந்தனா்.
திருப்பதியில் இருந்து 26 பயணிகளுடன் மதுரை நோக்கி வியாழக்கிழமை இரவு பேருந்து சென்றுகொண்டிருந்தபோது சித்தூா் மாவட்டத்தில் உள்ள கஜுலாப்பள்ளி கிராமம் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
‘காயமடைந்தவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்; சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய லாரி ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது’ என காவல்துறையினா் தெரிவித்தனா்.
சிக்கிம்: சிக்கிமின் கியால்ஷிங் மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த காா் 500 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 5 போ் உயிரிழந்தனா். இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு நிகழ்ந்தது. இந்த விபத்தில் உயிரிழந்தவா்கள் மேற்கு சிக்கிம் உள்ள யுக்சோம்-தாஷிடிங் தொகுதியில் உள்ள அப்பா் அரித்தாங்கில் வசிப்பவா்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.