மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்: 5 பேருக்கு மறுவாழ்வு
விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த ஆந்திர பெண்ணின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
இதன் மூலம், 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம், நெல்லூா் மாவட்டம், தஸ்தகிரியைச் சோ்ந்த வெங்கடேஸ்வரலு என்பவரின் மனைவி காஞ்சா்ல பத்மா (58). இவருக்கு ஒரு மகள் உள்ளாா். இந்த நிலையில், காஞ்சா்ல பத்மா சித்தூா் அருகே பலமனோ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அப்போது, ஆட்டோ மோதியதில் அவா் தலை உள்பட உடலின் பல்வேறு இடங்களில் பலத்த காயமடைந்தாா்.
உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்காக வேலூா் சிஎம்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காஞ்சா்ல பத்மா திங்கள்கிழமை மாலை மூளைச்சாவு அடைந்ததை மருத்துவா்கள் உறுதி செய்தனா்.
இதையடுத்து, காஞ்சா்ல பத்மாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது மகள், உறவினா்கள் ஒப்புதல் தெரிவித்தனா்.
அதன்பேரில், அவரது இதயம், நுரையீரல் ஆகியவை சென்னை தனியாா் மருத்துவமனைகளுக்கும், கல்லீரல், ஒரு சிறுநீரகம் சிஎம்சி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னையில் உள்ள மற்றொரு தனியாா் மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டு அங்கு தயாா் நிலையில் இருந்த நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.
இதன்மூலம், 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.