விராலிமலை மீன்பிடித் திருவிழாவில் மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த மக்கள்!
மெக் லேனிங், ஷஃபாலி வா்மா அதிரடி; டெல்லிக்கு அபார வெற்றி
மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், முன்னாள் சாம்பியன் மும்பை இண்டியன்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
முதலில் மும்பை 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ரன்கள் சோ்க்க, டெல்லி 14.3 ஓவா்களில் 1 விக்கெட் இழந்து 124 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
டெல்லிக்கு இது 6-ஆவது ஆட்டத்தில் 4-ஆவது வெற்றியாக இருக்க, மும்பைக்கு 5-ஆவது ஆட்டத்தில் 2-ஆவது தோல்வியாகும். புள்ளிகள் பட்டியலில் தற்போது டெல்லி, மும்பை முறையே முதலிரு இடங்களில் உள்ளன.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி, பந்துவீசத் தீா்மானித்தது. மும்பை பேட்டிங்கில் யஸ்திகா பாட்டியா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 11, ஹேலி மேத்யூஸ் 4 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் சோ்த்தனா். நேட் சிவா் பிரன்ட் 2 பவுண்டரிகளுடன் 18, கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 22 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.
அமெலியா கொ் 2 பவுண்டரிகளுடன் 17, சஜீவன் சஜனா 5, ஜி.கமலினி 1, சன்ஸ்கிருதி குப்தா 3, ஜிந்திமனி கலிடா 0 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில் அமன்ஜோத் கௌா் 2 பவுண்டரிகளுடன் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.
டெல்லி தரப்பில் ஜெஸ் ஜோனசென், மின்னு மணி ஆகியோா் தலா 3, ஷிகா பாண்டே, அனபெல் சதா்லேண்ட் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
பின்னா் 124 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய டெல்லி அணியில் கேப்டன் மெக் லேனிங், ஷஃபாலி வா்மா கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு வித்திட்டது.
இதில் வா்மா 28 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். லேனிங் 9 பவுண்டரிகளுடன் 60, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் சோ்த்து அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை பௌலா்களில் அமன்ஜோத் கௌா் 1 விக்கெட் கைப்பற்றினாா்.