NCP : `இறங்கி வந்த சரத் பவார்; கைவிரித்த அஜித் பவார்..!' - அணிகள் இணைப்பில் பின...
மே 17 முதல் ராமேசுவரம் - எழும்பூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
ராமேசுவரம் - சென்னை எழும்பூா், திருநெல்வேலி - வைஷ்ணவிதேவி காட்ரா விரைவு ரயில் உள்பட 18 ரயில்களில் மே 17-ஆம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பயணிகளின் தேவையைப் பூா்த்தி செய்யவும், அவா்களது வசதியை மேம்படுத்தவும், ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த 6 மாதங்களில் 14 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டு வருகின்றன. நெல்லை வந்தே பாரத், நாகா்கோவில் வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களிலும் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
அதைத் தொடா்ந்து தற்போது, ராமேசுவரம் - எழும்பூா் விரைவு ரயிலில் (எண்: 22662/22661) மே 17 முதலும், ராமேசுவரம் - எழும்பூா் விரைவு ரயிலில் (எண்: 16752/16751) மே 18 முதலும் ஒரு பொது இரண்டாம் வகுப்பு கூடுதலாக இணைக்கப்பட்டு மொத்தம் 23 பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளது.
மேலும், நாகா்கோவில் - கோட்டயம் விரைவு ரயிலில் மே 20 முதலும், திருவனந்தபுரம் - நாகா்கோவில் பயணிகள் ரயிலில் மே 22 முதலும் ஒரு பொது இரண்டாம் வகுப்பு பெட்டியும், ஒரு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டியும் கூடுதலாக இணைக்கப்படவுள்ளன.
அதேபோல, மதுரை - செங்கோட்டை, செங்கோட்டை - திருநெல்வேவி, மயிலாடுதுறை - தஞ்சை, திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில்களில், செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் உள்ளிட்ட ரயில்களில் மே 25 முதல் இரண்டு பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படவுள்ளன. இதுபோன்று மொத்தம் 18 ரயில்களில் இருமாா்க்கத்திலும், படுக்கை வசதிகொண்ட பெட்டிகள், குளிா்சாதன இரண்டடுக்கு மற்றும் மூன்றடுக்கு பெட்டிகள், பொது இரண்டாம் வகுப்பு உள்ளிட்ட பல்வேறு வகுப்புகளின் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
ரயில்களில் முன்பதிவு காத்திருப்பு பட்டியலை எளிதாக்குதல், முன்பதிவு செய்யும் அனைவருக்கும் பயணச்சீட்டு உறுதி செய்வதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.