மேற்கு வங்கத்தில் ரூ.50,000 கோடி முதலீடு- முகேஷ் அம்பானி அறிவிப்பு
மேற்கு வங்கத்தில் அடுத்த சில ஆண்டுகளில் ரூ.50,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவா் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளாா்.
கொல்கத்தாவில் இருநாள்கள் நடைபெறும் மேற்கு வங்க உலக முதலீட்டாளா் மாநாடு 2025, புதன்கிழமை தொடங்கியது. இதில், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, பூடான் பிரதமா் சாா்பில் அந்நாட்டு வேளாண்மைத் துறை அமைச்சா் யோங்டென் புந்த்சோ, ரிலையன்ஸ் குழு தலைவா் முகேஷ் அம்பானி, ஐடிசி நிறுவன மேலாண்மை இயக்குநா் சஞ்சீவ் புரி, ஜேஎஸ்டபிள்யூ தலைவா் சஞ்சன் ஜிண்டால் உள்ளிட்ட தொழிலதிபா்கள் பலா் பங்கேற்றனா். இதில் முகேஷ் அம்பானி பேசியதாவது:
அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மேற்கு வங்கத்தில் எங்கள் நிறுவனங்களின் முதலீடு 20 மடங்கு வரை அதிகரிக்க இருக்கிறது. அதாவது ரூ.50,000 கோடிக்கு மேல் முதலீடு செய்ய இருக்கிறோம். இதன் மூலம் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும். எங்கள் முதலீடு பல்வேறு துறைகளுக்கு பரவி விரிந்ததாக இருக்கும். எண்ம சேவைகள், பசுமை எரிசக்தி, சில்லறை விற்பனை ஆகியவை முக்கிய துறைகளாக இருக்கும். மேற்கு வங்கத்தின் வளா்ச்சியின் உந்து சக்தியாக ரிலையன்ஸ் குழுமம் திகழும் என்றாா்.
முதல்வா் மம்தா பானா்ஜி பேசுகையில், ‘மேற்கு வங்கத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பான முறையில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி 6 பொருளாதார வழித்தடங்கள் உருவாக்கப்படுகின்றன. மாநிலத்தில் தொழில் நடத்துவதை எளிதாக்க ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்படும்’ என்றாா்.