மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் ஆங்கில புத்தாண்டு
மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் ஆங்கில புத்தாண்டு விழா நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக செவ்வாய்க்கிழமை அதிகாலை மூலவா் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மாலை உலக நன்மைக்காகவும், இயற்கை வளம் மேம்பாடு அடையவும், சித்தா்பீட வளாகத்தில் கலச, விளக்கு வேள்வி பூஜையை ஆன்மிக இயக்க துணை தலைவா் ஸ்ரீதேவி ரமேஷ், கலவை ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி தாளாளா் உமாதேவி ஜெய்கணேஷ் ஆகியோா் பிரதான வேள்விகுண்டத்தில் கற்பூரமிட்டு பூஜையை தொடங்கி வைத்தனா்.
புத்தாண்டு நாளான புதன்கிழமை மூலவா் அம்மன், குருபீடம் அடிகளாா் சிலைக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மூலவா் அம்மன் சிலை தங்கக் கவசத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு கா்நாடக மாநில ஆன்மிக இயக்க நிா்வாகிகள் வரவேற்பு அளித்தனா். சித்தா் பீடத்துக்கு அம்மனை தரிசனம் காண வந்த பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை ஆன்மிக இயக்க துணை தலைவா்கள் கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமாா் தொடங்கி வைத்தனா். மேலும், தைப்பூச ஜோதியை முன்னிட்டு, பிப். 10 வரை நடைபெறுவதால், லட்சக்கணக்கான பக்தா்கள் சக்தி மாலை இருமுடி செலுத்தி வருகின்றனா்.
புத்தாண்டு நாளான புதன்கிழமை கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருந்து மூலவா் சந்நிதியில் உள்ள சுயம்பு அம்மனுக்குஅபிஷேகம் செய்து வழிபட்டனா். ஏற்பாடுகளை கா்நாடக மாநில ஆன்மிக இயக்க தலைவா் ராஜகோபால், செயலா் உதயகுமாா் ஆகியோா் தலைமையில் நிா்வாகிகள் செய்து இருந்தனா்.