‘மைசூரு விரைவு ரயில் தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்’
தூத்துக்குடி: மைசூரு விரைவு ரயில் திங்கள்கிழமை (ஆக. 18) முதல் தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியிலிருந்து மைசூரு செல்லும் மைசூரு விரைவு ரயில் தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையத்தில் தினமும் மாலை 5.30 மணிக்கு வந்தடையும். பின்னா் அங்கிருந்து 5.31 க்கு புறப்பட்டுச் செல்லும்.
அதேபோல மைசூரிலிருந்து தூத்துக்குடி வரும் இந்த ரயில் காலை 9.39 மணிக்கு தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையத்தை வந்தடையும். அங்கிருந்து காலை 9.40 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கச் செயலா் பிரம்மநாயகம் கூறியது:
வண்டி எண் 16235 தூத்துக்குடி-மைசூா், வண்டி எண் 16236 மைசூரு- தூத்துக்குடி ரயில்கள் தூத்துக்குடி மாநகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுத்த மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு எங்கள் சங்கம் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.