`ஓப்பனிங்கில் 3 முதல்வர்கள்; MGR அனுப்பி வைத்த படப்பெட்டி’ - தரைமட்டமான கொடுமுடி கே.பி.எஸ் தியேட்டர்
சினிமா... இந்த மூன்று வார்த்தை போதும் நம்மில் பலரையும் ஒன்றிணைத்திட! வாழ்வில் எத்தனையோ துயரங்களையும், மிகப்பெரிய தோல்விகளையும் கண்ட ஒருவனைக் கூட பரவசமடைய வைத்து, விசில் அடிக்க வைத்து, கைதட்டிக் கொண்டாட வைத்திடும் மூன்று மணி நேர விந்தை.
நம் நாட்டில் சினிமா என்பது மேலைநாடுகளைப் போல வெறும் பொழுதுபோக்கின் ஒரு பாகம் மட்டுமல்ல. இங்கு அது பலருக்கும் வாழ்க்கையின் ஒரு அங்கம். அதன் துவக்க இடம் தான் தியேட்டர்கள்.
ஆரம்பத்தில் நம் ஊரில் சினிமா கொட்டகைகளாக ஊரின் எல்லையில் அமைந்தவை, பின்னாளில் தியேட்டர், மல்டி பிளக்ஸ் என இன்று வரை உருமாற்றம் அடைந்து கொண்டே தான் இருக்கிறது. என்னதான் தியேட்டர்கள் காலத்திற்கு ஏற்ப வளர்ந்து வந்தாலும், பல தியேட்டர்கள் வருமான வீழ்ச்சிகளாலும், பராமரிப்புச் செலவின் பற்றாக்குறையாலும் இடிக்கும் நிலையை வந்தடைகிறது.
கே.பி.எஸ் தியேட்டர்!
அப்படிப்பட்ட ஒரு நிலையை வந்தடைந்துள்ள திரையரங்கம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் அமைந்துள்ள கே.பி.எஸ் தியேட்டர். அந்த காலத்தில் திரைத்துறையில் கொடிகட்டிப் பறந்த கே.பி.சுந்தராம்பாள் அவர்களால் 1969-களில் கட்டப்பட்டு கொடுமுடியின் ஒரு அடையாளமாக மாறிய ஒன்றுதான் கே.பி.எஸ் தியேட்டர்.

இது தற்போது இடிக்கும் நிலைக்கு வந்ததற்கான காரணத்தையும் இந்த தியேட்டரின் அந்த கால அனுபவங்களையும் பற்றி கே.பி. சுந்தராம்பாள் அவர்களின் நெருங்கிய உறவினரான சக்தி கணேஷ் அவர்களிடம் பேசினோம்...
``இன்னைக்கு நீங்க பாக்குற இந்த இடம், ஒரு காலத்துல கொடுமுடி ஊர் மக்களோட ஒரு முக்கியமான பொழுதுபோக்கு மையம். கொடுமுடி மட்டுமில்ல, இதை சுத்தி இருக்க ஊர் மக்கள் கூட வண்டி கட்டி வந்து இங்க படம் பார்த்துட்டு போவாங்க. அவ்வளவு பேமஸ் இந்த தியேட்டர். இதுக்கு முதல் காரணம் கே.பி.சுந்தராம்பாள் அம்மா தான்.” என்கிறார்

விடுதலைப் போராட்டத்தில் கே.பி.சுந்தராம்பாள்
இன்றும் நம் பலரின் மனதில் ஔவை என நினைத்துப் பார்க்கையில் மனதில் வந்து நிற்பது கே.பி.சுந்தராம்பாள் அவர்களின் உருவம் தான் . அன்று நம் தமிழில் வெளிவந்த புராணத் திரைப்படங்களில் இவரின் கதாபாத்திரத்திரமும், பக்திப் பாடல்களும் இன்றும் நம் மனதை விட்டு நீங்கவில்லை. அதைப் பற்றி கேட்ட போது...
``நீங்க எல்லாரும் நினைக்கிற மாதிரி கே.பி.சுந்தராம்பாள் அம்மா வெறும் திரைப்பட நடிகையோ அல்லது பாடகியோ மட்டும் கிடையாது. அவங்க ஒரு சுதந்திர போராட்ட தியாகி. எப்படி பாரதி தன்னோட பாடல்களால சுதந்திர தாகத்தை மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்த்தாரோ, அதே மாதிரி தன்னோட ஆரம்பகால மேடை நாடகங்கள்ள வெள்ளையன எதிர்த்து பல வீர வசனங்கள பேசி மக்கள் மனசுல சுதந்திர போராட்ட உணர்வ கொண்டு வந்தாங்க எங்க கே.பி.சுந்தராம்பாள் அம்மா. காந்தியடிகள் கொடுமுடி வந்தப்போ அவர தன்னோட வீட்டுல தங்க வச்சு தங்க தட்டுல சோறு போட்டவங்க கே.பி.சுந்தராம்பாள் அம்மா.” என்றார்,
`மூன்று முதலமைச்சர்கள் ஒன்றிணைந்த இடம்’
`இன்று வரை கே.பி.எஸ் தியேட்டர் இந்த பகுதியின் அடையாளமாக இருக்க காரணமென்ன?’ என்று கேட்டபோது..
``இந்த இடம் இன்னைக்கு வரைக்கும் அடையாளமா இருக்க முதல் காரணம் வரலாறுல எங்கேயுமே நடந்திடாத நிகழ்வு ஒன்னு இங்க நடந்துச்சு. கே.பி.எஸ் தியேட்டரோட ஓப்பனிங் தான் அந்த நிகழ்வு.
தமிழகத்தோட மூன்று முதல்வர்களும் ஓன்றாக இருந்த வரலாறு இந்த தியேட்டர் ஓப்பன் பன்னுற நாள் அன்னைக்கு நடந்துச்சு. தமிழ்நாட்டோட அன்றைய முதலமைச்சரான கலைஞர், எம்.ஜி.ராமச்சந்திரன், செல்வி ஜெ.ஜெயலலிதானு இவங்க மூனு பேரும் ஒரே நேரத்துல விழாவுல கலந்துகிட்டாங்க. இவங்க மூனு பேரையும் ஒரே இடத்தில ஒரு சேர பாக்க வைச்ச பெருமை நம்ம கே.பி.சுந்தராம்பாள் அம்மாவைத்தான் போய் சேரும். ” என்றார்.

கலைத்துறை மறந்த கே.பி.சுந்தராம்பாள்
திரைத்துறையில் எத்தனையோ நடிகைகள் வந்து மறைந்தாலும் நம் நினைவில் நிற்பது ஒரு சிலர் தான். அப்படி இன்று வரை மக்கள் தங்கள் மனதில் வைத்திருக்கும் ஒரு நபர் தான் கே.பி.சுந்தராம்பாள் அவர்கள். அப்படிப்பட்டவர்களின் நினைவாக அவர் இறந்த பிறகு இன்றுவரை அரசும் , கலைத்துறறையைச் சார்ந்தவர்களும் ஒன்றும் செய்யாதது மன வருத்தத்தை அளிப்பதாக ஊர் மக்களும், உறவினர்களும் தெரிவிக்கின்றனர்.

மேலும் தொடர்ந்தவர்கள், ``கே.பி.எஸ் தியேட்டர் பல வரலாற்று நிகழ்வுகள் நடந்த இடம். அந்த இடத்தை அரசு நினைவாலயமாக மாற்றிய இருக்கலாம் என்றும் கூறுகிறனர். அவர் வாழும் காலத்தில் இங்கிலாந்து ராணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த போது அவரே விரும்பி பார்க்க நினைத்த ஒருவர் தான் கே.பி.சுந்தராம்பாள் அவர்கள்” என்கிறார்கள்
கொடுமுடி பகுதியில் இருந்த சிலரிடம் பேசியபோது, ``இன்று வரை கே.பி.சுந்தராம்பாள் அவர்களால் பயன்பெற்ற எத்தனையோ பேர் அந்த ஊரில் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றர்.
காலத்திற்கு ஏற்ப திரைத்துறையும் திரையரங்குகளும் மாறுவது இயல்பு தான். ஆனால் காலம் தாண்டி நிற்கும் வரலாற்று நினைவுகளை அது நிகழ்ந்த இடங்களையும் பாதுகாப்பது நம் கடமை.” என்கிறார்கள்.

கொரோனா காலத்தில் ஏற்பட்ட நட்டத்தால் இன்னும் சில தியேட்டர்கள் எழ முடியாத வீழ்ச்சியில் தான் இருக்கிறது. அப்படி கொரோனாவால் வலுவிழந்தது தான் கொடுமுடியின் கே.பி.எஸ் தியேட்டரும்.
எத்தனை இருந்தாலும் தியேட்டர்கள் தான் என்பது நம் நாட்டில் சமதர்மம் நிலவிய முதல் இடம். படித்தவன், படிக்காதவன், ஏழை, செல்வந்தன், வேற்று சாதிக்காரன் என அனைவரையும் சரிசமமாய் அமர வைக்கும் ஒரு சமதர்ம கூடம்.
தியேட்டர்களில் சினிமாவை ரசிக்க விரும்பும் கூட்டம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. அத்தகைய தியேட்டர்களை பழமையின் காரணமாக இடித்து விடாமல் காலத்தின் நினைவாக காப்பது நம் கடமையாகும்.
கே.பி.எஸ் தியேட்டரில் நடந்த ருசிகர நிகழ்வு
எம்ஜி.ஆர் நடித்த ரிக்ஷாகாரன் திரைப்படம் 1971 ஆம் ஆண்டு வெளியானது அந்த படத்தை தனது திரையரங்கில் திரையிட நினைத்தார் கே.பி.சுந்தராம்பாள் அவர்கள். ஆனால், அந்த திரைப்பட பெட்டியை போட்டியாக இருந்த வேறு தியேட்டர் நிறுவனம் அதிக தொகையை செலுத்தி பெற்றிடவே வருத்தமுற்று இருந்தார்.
இது பற்றி தொலைபேசியில் எம்.ஜி.ஆரிடம் கூறியபோது கே.பி.எஸ் தியேட்டருக்கென்றே தனி ரீல் பெட்டி ஒன்றை அனுப்பி வைக்குமாறு தனது மேலாளர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களிடம் ஆணையிட்டாராம். எம்.ஜி.ஆரிடம் இருந்து பெறப்பட்ட ரீல் பெட்டி என ஊரெங்கும் பரவிட வசூல் சக்கை போடு போட்டதாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...