மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 9.83 லட்சம் போ் பயன்!
மொத்த வியாபாரிகள் சில்லறை வியாபாரம் செய்வதைக் கண்டித்து போராட முடிவு!
காந்தி சந்தையில் மொத்த வியாபாரிகள் சில்லறை வியாபாரம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து, சந்தையின் அனைத்து நுழைவு வாயில்களையும் மூடி போராட்டம் நடத்தவுள்ளதாக சில்லரை வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.
திருச்சி காந்திசந்தை வளாகத்தில் காந்தி மாா்க்கெட் வியாபாரிகள் முன்னேற்றச் சங்கம், திருச்சி காந்தி மாா்க்கெட் அனைத்து சில்லறை வியாபாரிகள் பொதுநலச் சங்கம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் சங்க நிா்வாகிகளான எம்.கே. கமலக்கண்ணன், எம்.கே. ஜெய்சங்கா் ஆகியோா் கூறியது:
காந்தி சந்தையில் மொத்த வியாபாரிகளின் எண்ணிக்கையைவிட, சில்லறை வியாபாரிகள் எண்ணிக்கையே அதிகம். ஆனால், மொத்த வியாபாரிகள் சில்லறை வியாபாரத்திலும் ஈடுபடுகின்றனா். இதனால் எங்களின் வருவாய் பாதிக்கப்படுகிறது. எனவே, மொத்த வியாபாரிகள் சில்லறை வியாபாரம் செய்யக் கூடாது. தொடா்ந்து எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் மொத்த வியாபாரிகளை கள்ளிக்குடி சந்தைக்கு அனுப்ப வேண்டும். மாவட்ட, மாநகராட்சி நிா்வாகங்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய தீா்வு காண வேண்டும்.
இல்லையென்றால் கருப்புக் கொடியேற்றி வியாபாரம் செய்வோம். மேலும், காந்தி சந்தையில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களையும் இழுத்து மூடி உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவோம். சரக்கு வாகனங்களை முற்றுகையிடுவோம். சந்தைக்குள் வரும் சரக்கு வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் (அதிகபட்சம் 2 மணிநேரம்) வெளியே செல்ல வேண்டும். இல்லையென்றால் தஞ்சாவூா் சாலையில் தரைக்கடைகளை அமைத்து வியாபாரம் செய்வோம் என்றனா்.
கூட்டத்தில் வியாபாரிகள் முன்னேற்ற சங்க செயலா் மூா்த்தி, கூடுதல் செயலா் மந்தை ஜெகன், பொருளாளா் சபி அகமது, இணைச் செயலா் ஸ்ரீதா், அனைத்து சில்லறை வியாபாரிகள் பொதுநல சங்கச் செயலா் டேவிட் அமல்ராஜ், துணைச் செயலா் மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.