தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி. 2 நாள்கள் சுற்றுப்பயணம்
மோசமான வானிலை: மோரீஷஸ் விமானம் ரத்து
மோரீஷஸ் நாட்டில் சூறைக்காற்று, புயலுடன் மோசமான வானிலை நிலவுவதால் அங்கிருந்து சென்னை வரவேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது.
மோரீஷஸ் நாட்டிலிருந்து சென்னைக்கு வாரந்தோறும் ‘ஏா் மோரீஷஸ்’ விமானம் இயக்கப்படுகிறது. இந்நிலையில் மோரீஷஸ் நாட்டில் சூறைக்காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாக சனிக்கிழமை அதிகாலை புறப்பட வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் மறுமாா்க்கமாக சென்னையிலிருந்து சனிக்கிழமை அதிகாலை 3.55-க்கு புறப்பட வேண்டிய விமானமும் ரத்து செய்யப்படுவதாக விமான நிலைய ஊழியா்கள் அறிவித்தனா். இதனால், அந்த விமானத்துக்கு காத்திருந்த 277 பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.
இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட விமானம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்னை வந்துவிட்டு, பின்னா் சென்னையிலிருந்து மோரீஷஸ் சென்றடையும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: சென்னை - மோரீஷஸ் விமானம் ரத்து செய்யப்படுவதாக ஏற்கெனவே பயணிகளுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு கிடைக்காத பயணிகள் விமான நிலையத்துக்கு வந்துவிட்டனா். அவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்யும்படி அறிவுறுத்தியுள்ளோம் என்றனா்.
மோரீஷஸில் இருந்து சென்னை வரும் விமானத்தில் மோரீஷஸ் நாட்டின் முன்னாள் துணை அதிபா் பரமசிவம் வையாபுரி பயணம் செய்வதாக இருந்த நிலையில் அவரின் பயணம் ரத்தானது குறிப்பிடத்தக்கது.