``மோடி பாபாவிடமிருந்து இதை வாங்கி வரவேண்டும்'' - ஏக்நாத் ஷிண்டே பேரன் வைத்த கோரிக்கை
மகாராஷ்டிராவில் அக்டோபர் அல்லது நவம்பரில் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் மும்பை மாநகராட்சியை எப்படியும் பிடித்துவிடவேண்டும் என்பதில் பா.ஜ.க உறுதியாக இருக்கிறது. இதற்காக ஏற்கெனவே தேர்தல் வேலையை பா.ஜ.க தொடங்கி விட்டது.
இத்தேர்தலில் தங்களது சிவசேனா கட்சிக்கு கணிசமான இடங்களை பெற துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அடுத்தடுத்து டெல்லி சென்று பா.ஜ.க தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். நேற்று மீண்டும் குடும்பத்தோடு டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து பேசினார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது அவருடன் மனைவி மகன், மருமகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆனால் ஏக்நாத் ஷிண்டேயின் 5 வயது பேரன் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஏக்நாத் ஷிண்டே, பேரன் ருத்ரன்ஷ் வீட்டில் விளையாடிக்கொண்டிருப்பதாகவும், வரும்போது போர் விமானங்களையும், பொம்மைகளையும் மோடி பாபாவிடமிருந்து வாங்கி வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தான் என்றார்.
அதனை கேட்டு பிரதமர் நரேந்திர மோடி சிரித்தார். பின்னர் பேட்டியளித்த ஏக்நாத் ஷிண்டே, எனது பேரனின் கோரிக்கை மிகவும் நல்லது. போர்விமானங்களை எங்களது போராட்டத்திற்கு (மகாராஷ்டிரா அரசியல், உள்ளாட்சி தேர்தல்) பயன்படுத்த முடியும்.
ஆப்ரேஷன் மகாதேவ் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் பகவான் சங்கரின் புகைப்படத்தை கொடுத்தேன். துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு சிவசேனா நிபந்தனையற்ற ஆதரவு கொடுக்கும். மகாராஷ்டிராவில் நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மகாயுதி கூட்டணி இணைந்து போட்டியிடும்'' என்று தெரிவித்தார்.

முதல்வர் தேவேந்திர பட்னாவிசுடன் கருத்து வேறுபாடு காரணமாகத்தான் அடிக்கடி டெல்லி வருகிறீர்களா என்று கேட்டதற்கு, அதனை மறுத்த ஷிண்டே மகாராஷ்டிரா நலனுக்காக நாங்கள் இணைந்து பணியாற்றுகிறோம் என்று தெரிவித்தார்.
கடந்த ஒரு மாதத்தில் ஏக்நாத் ஷிண்டே மூன்றாவது முறையாக டெல்லிக்கு வந்து பாஜக தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார்.
முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயும் டெல்லிக்கு சென்றுள்ளார். அவர் டெல்லியில் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளார்.