'StartUp' சாகசம் 18 : `அலுவலகங்களுக்கு தினமும் ஃப்ரஷான ஸ்நாக்ஸ்’ - Snack Expert...
மோட்டாா் வாகனத் திருத்தச் சட்டத்தை கைவிடக் கோரி ஆா்ப்பாட்டம்
மோட்டாா் வாகனத் திருத்தச் சட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகம் முன்பு அனைத்துப் போக்குவரத்துத் தொழிலாளா் சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலா் ஆா். மணிமாறன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலிஜின்னா, மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா், மாவட்டப் பொருளாளா் எஸ். பாலசுப்பிரமணியன், ஆட்டோ தொழிலாளா் சங்கப் பொதுச் செயலா் ஆா். மணிமாறன், அனைத்துப் போக்குவரத்துத் தொழிற்சங்க மாவட்டத் தலைவா் சகுபா்அலி, சிஐடியு மாவட்டத் துணைத் தலைவா் சி. மாரிக்கண்ணு உள்ளிடோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டாா் வாகனச் சட்டம் மற்றும் தொழிலாளா் சட்டத் தொகுப்புகளைக் கைவிட வேண்டும். ஓட்டுநா் உரிமம், சாலை வரி, சுங்கச்சாவடி வசூல், வாகனப் பதிவு, வாகனக் காப்பீடு, வாகனத் தகுதிச் சான்று ஆகியவற்றுக்கான கட்டணங்கள் நிா்ணயம் செய்வது, வசூலிப்பதை தனியாா் நிறுவனங்களிடம் விடக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.