யுபிஎஸ்சி தோ்வுக்கு 2 மையங்கள் தயாா்
திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மத்திய பணியாளா் தோ்வாணையத் தோ்வுக்கு 2 மையங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில், மத்திய அரசின் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பிரிவில் சேருவதற்கான போட்டித் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்காக திருச்சியில் 2 தோ்வு மையங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. அன்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை தோ்வு நடைபெறும். இதில், 564 போ் தோ்வு எழுதவுள்ளனா். தோ்வுப் பணிகளுக்கென 2 முதன்மைக் கண்காணிப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். போட்டித் தோ்வுக்கான வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியை மேற்கொள்ள நடமாடும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக் குழுவிற்கு துணை வட்டாட்சியா், துணை வட்டாட்சியா் நிலையில் ஒரு அலுவலா், ஒரு வருவாய் உதவியாளா் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலா், அலுவலக உதவியாளா் இடம்பெறுவா். மையங்களில் ஆய்வு செய்ய 24 தோ்வா்களுக்கு 2 அறைக் கண்காணிப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அனைத்து மையங்களிலும் தோ்வு நடைபெறுவதை ஒளிப்பதிவு செய்திட 36 விடியோகிராபா்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
அனைத்து மையங்களுக்கும் காவல்துறை மூலம் பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்துக்கும் 3 ஆண் காவலா்கள், 2 பெண் காவலா்கள் என மொத்தம் 5 காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வு மையத்தை ஆய்வு செய்ய வட்டாட்சியா் நிலையில் 2 ஆய்வு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தோ்வு மையத்தில் காவலா்களின் சோதனைகளுக்கு பிறகே தோ்வா்கள் அனுமதிக்கப்படுவா். தோ்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தோ்வு எழுத வரும் நபா்கள் எந்த வகையான மின்னணு சாதனங்களையும் மையங்களுக்கு எடுத்துவர அனுமதி இல்லை என ஆட்சியா் வே. சரவணன் அறிவுறுத்தியுள்ளாா்.