ரஜினியின் முதல் திரைப்படம் - 50வது ஆண்டு கூலி வரை வெளியிடும் ஒரே திரையரங்கம்!
நடிகர் ரஜினிகாந்த்தின் சினிமா பயணத்துடன் இணைந்த திரையரங்கம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தின் டிரைலர் மற்றும் புரமோஷன்களால் இந்தியளவில் பல திரைகளில் கூலி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கம் மற்றும் நாகர்ஜூனா, ஆமிர் கான், உபேந்திரா என பான் இந்திய மொழிகளுக்கு ஏற்ற நட்சத்திர நடிகர்கள் இணைந்துள்ளதால் பெரிய வணிக வெற்றியை அடையலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், நடிகர் ரஜினிகாந்த் சினிமாவுக்கு அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவடையுள்ளது. 1975, ஆகஸ்ட் 15 ஆம் தேதி அபூர்வ ராகங்கள் படம் வெளியானது. கூலி திரைப்படம் வருகிற ஆக.14 ஆம் தேதி வெளியாகிறது.
இந்த 50 ஆண்டுகளில் கே. பாலச்சந்தரிலிருந்து லோகேஷ் கனகராஜ் வரை பல இயக்குநர்கள் இயக்கத்தில் ரஜினிகாந்த் 165 திரைப்படங்களுக்கும் மேல் நடித்து இப்போதும் இந்திய சினிமாவின் வசூல் மன்னனாக நீடிக்கிறார்.
இந்த நிலையில், முதல் படமான அபூர்வ ராகத்தை வெளியிட்ட திரையரங்கம் ஒன்று கூலி திரைப்படத்தையும் வெளியிடுகிறது. சென்னை தியாகராய நகரிலுள்ள கிருஷ்ணவேனி சினிமாஸ் திரையரங்கம்தான் இந்த இனிய ஆச்சரியத்தை நிகழ்த்தவுள்ளது.
அபூர்வ ராகங்கள் - கூலி வரையிலான இடைப்பட்ட 50 ஆண்டுகால பயணத்தில் ரஜினியுடன் இணைந்து வந்த ஒரே திரையரங்கம் இதுதான் என்கின்றனர்.
அபூர்வ ராகம் சென்னையில் மிட்லாண்ட், அகஸ்தியா, ராக்ஸி, கிருஷ்ணவேனி ஆகிய தியேட்டர்களில் வெளியானது. ஆனால், கிருஷ்ணவேனியைத் தவிர மற்ற திரையரங்கங்கள் மூடப்பட்டுவிட்டன.
அன்று அபூர்வ ராகத்தை கிருஷ்ணவேனியில் பார்த்த ரசிகர்களில் யாராவது, அதே அரங்கில் கூலியைப் பார்க்க வருவார்களா?!
இதையும் படிக்க: விஜய் சாதனையை முறியடித்த ரஜினி!