ரஞ்சி கோப்பை: 7 இந்திய வீரர்கள் இருந்த மும்பையை விழ்த்தி ஜம்மு காஷ்மீர் வரலாற்று சாதனை!
ரஞ்சி கோப்பை தொடரில் 7 இந்திய வீரர்கள் இருந்த மும்பை அணியை விழ்த்தி ஜம்மு காஷ்மீர் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்திய அணி டெஸ்ட்டில் நியூசிலாந்துடன் 0-3 எனவும் ஆஸி. உடன் பிஜிடி தொடரை 1-3 எனவும் இழந்தது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி மீது பிசிசிஐ கடும் அதிருப்தி அடைந்தது.
இந்தத் தோல்விகளை முன்னிட்டு பிசிசிஐ இந்திய வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக அனைத்து வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டுமென உத்தரவிட்டது.
இதன்படி பலரும் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வருகிறார்கள். இதில் மும்பை அணியில் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், ரஹானே, ஸ்ரேயாஷ் ஐயர், ஷிவம் துபே, ஷர்துல் தாக்குர், தனுஷ் கோட்டியான் விளையாடினார்கள்.
முதல் இன்னிங்ஸில் மும்பை 120/10 ரன்கள் எடுத்தது. ஷர்துல் தாக்குர் மட்டுமே அதிகபட்சமாக (51)அரைசதம் அடித்தார். ஜம்மு காஷ்மீர் அணி 206/10 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் ஷுபம் கஜுரியா 53, அபித் முஷ்டக் 44 சிறப்பாக ஆடினார்கள்.
இரண்டாம் இன்னிங்ஸில் மும்பை அணி 290க்கு ஆல் அவுட்டானது. இதில் ஷர்துல் தாக்குர் மட்டுமே அதிகபட்சமாக 119 ரன்கள் அடித்தார்.
அடுத்து விளையாடிய ஜம்மு-காஷ்மீர் அணி 49 ஓவரில் 207/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அபித் முஷ்டக் சிக்ஸர் அடித்து வெற்றி இலக்கை எட்டினார்.
இரண்டு இன்னிங்ஸிலும் 7 விக்கெட்டுகள் எடுத்த ஜம்மு-காஷ்மீர் அணியைச் சேர்ந்த யுத்விர்சிங் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
7 இந்திய வீரர்கள் கொண்ட (கேப்டு பிளேயர்ஸ்) மும்பை அணியை ஒருவர் கூட இந்திய அணிக்கு விளையாடாத (அன்கேப்டு பிளேயர்ஸ்) ஜம்மு-காஷ்மீர் அணி வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது.