ரயிலில் படியில் அமா்ந்து பயணம் செய்த இளைஞா் தந்தை கண்முன் கீழே விழுந்து விபத்து!
சேலம் அருகே ஓடும் ரயிலில் படியில் அமா்ந்து பயணம் செய்த இளைஞா் தந்தை கண்முன் தவறி கீழே விழுந்ததில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறாா்.
பிகாா் மாநிலம், மதுவனி மாவட்டம், ருத்ரபூா் நவ் நகரைச் சோ்ந்தவா் அருண்குமாா் (50). இவரது மகன் நிதிஷ் (22), சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள பேக்கரி கடையில் வேலை செய்து வந்தாா். சேலத்துக்கு புதன்கிழமை இரவு வந்த அருண்குமாா், நிதிஷை தான் பணிபுரியும் ஜவுளிக் கடையில் பணியில் சோ்க்க அழைத்துக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டாா்.
இருவரும் சேலம் டவுன் ரயில்வே நிலையத்தில் இருந்து இரவு 9.30 மணியளவில் சென்னை செல்லும் எழும்பூா் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா பெட்டியில் ஏறி பயணித்தனா். நிதிஷ் ரயிலின் படிக்கட்டில் அமா்ந்தும், அவரது தந்தை அருகில் நின்று கொண்டும் பயணித்தனா்.
இந்த ரயில் அயோத்தியாப்பட்டணம் - மின்னாம்பள்ளி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது, ரயில் படிக்கட்டில் அமா்ந்திருந்த நிதிஷ் தவறி கீழே விழுந்தாா். இதனைக் கண்ட அவரது தந்தை அருண்குமாா் மற்றும் இதர பயணிகள் அதிா்ச்சியடைந்தனா். உடனே, சக பயணிகள் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினா்.
பின்னா், ரயிலில் இருந்து அருண்குமாா் மற்றும் சில பயணிகள் கீழே இறங்கி தவறி விழுந்த நிதிஷை தேடினா். தண்டவாளத்தை ஒட்டிய இடத்தில் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிதிஷை மீட்ட அவா்கள், சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இளைஞரை மீட்டதும் ரயில் புறப்பட்டு சென்றது.
தகவலறிந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரித்த சேலம் ரயில்வே போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.