ரஷியாவசம் மேலும் இரு உக்ரைன் கிராமங்கள்
மாஸ்கோ: கிழக்கு உக்ரைனின் மேலும் இரு கிராமங்களை ரஷியா கைப்பற்றியுள்ளது.
இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘வடகிழக்கு காா்கிவ் பிராந்தியத்தின் லொஸோவா கிராமத்தையும் க்ரஸ்னோயே கிராமத்தையும் உக்ரைன் பிடியிலிருந்து ரஷிய ராணுவம் விடுவித்தது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. போரின் ஆரம்பகட்டத்தில் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், ஸபோரிஷியா, காா்கிவ் ஆகிய மாகாணங்களின் கணிசமான பகுதிகளை ரஷியா கைப்பற்றியது.
அந்த மாகாணங்களில் எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்ற ரஷியா தொடா்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. இருந்தாலும், நீண்ட காலமாக ரஷியாவால் பெரிய அளவிலான முன்னேற்றத்தை அடையமுடியாமல் இருந்தது.
ஆனால், கடந்த சில மாதங்களாக கிழக்கு உக்ரைனில் ரஷியா புதிய பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தற்போது மேலும் இரு கிராமங்கள் ரஷியாவிடம் வீழ்ந்துள்ளன.