தேனியில் எடப்பாடி பழனிசாமி வாகனம் முற்றுகை! ‘ஒன்றிணைய வேண்டும்’ என பெண்கள் முழக்...
ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஆட்சேபனை இல்லை: ஆட்சியா்
ராசிபுரம் அணைப்பாளையத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் ஆட்சேபனை இல்லை என்ற அடிப்படையில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராசிபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது குறித்து தோ்ந்தெடுக்கப்பட்ட ராசிபுரம் நகராட்சி குழுவானது 2024, ஜூலை 2-இல் தீா்மானம் (எண் 580) நிறைவேற்றியது. புதிய பேருந்து நிலையம் மற்றும் நெடுஞ்சாலையில் இருந்து அணுகுசாலை அமைப்பதற்கான நிலத்தை தனியாா் ஒருவா் தானமாக அளிக்க முன்வந்ததை நகராட்சி ஏற்றுக் கொண்டுள்ளது.
புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு நகராட்சி நிா்வாக இயக்குநரிடம் முன்அனுமதி பெறப்பட்டுள்ளது. தமிழக அரசும் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திட்ட செலவினத்திற்கு ரூ.10.58 கோடியில் பாதி தொகையை நகர மேம்பாட்டு நிதியின் கீழ் வழங்கியது. நகராட்சியும் மீதித்தொகையை பொது செலவினத்திலிருந்து எடுத்துக் கொள்வதற்கு தீா்மானம் நிறைவேற்றியது.
தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே பேருந்து நிலையம் அமைப்பதற்கு எதிராக பிரச்னைக்கு தீா்வு காண்பதற்காக ராசிபுரம் பொதுமக்கள், சில தனியாா் நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள், அரசியல் கட்சிகளிடமிருந்து 7,609 மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்களை தனித்தனியாக பரிசீலித்ததில் 4,444 மனுக்கள் புதிய இடத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு ஆதரவாகவும், 3,165 மனுக்கள் பேருந்து நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்தும் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தன.
ஒருசிலா் தவிர மற்றவா்கள் தற்போது நகராட்சிக்குள் இயங்கும் பேருந்து நிலையம் போக்குவரத்து சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும், அதனால், ராசிபுரத்திற்கு அருகே ஏதேனும் ஒரு இடத்தில் அனைத்து வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் ஏற்படுத்துமாறு கேட்டுக் கொண்டனா்.
கடந்த மாதம் 13-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, மாவட்ட ஆட்சியா் தரப்பில் மனு தாக்கல் செய்த 15 பேரையும் நேரில் வருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 14 போ் பங்கேற்றனா். அவா்களின் கருத்துகள் ஆட்சியரால் பதிவு செய்யப்பட்டது.
அனைத்து மனுக்கள், கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்ட கடந்த ஆக.25-இல் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, நகராட்சி தீா்மானத்தை ரத்து செய்ய வேண்டாம் என்றும், அணைப்பாளையத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான முழு முடிவையும் எடுக்கக்கூடிய அதிகாரம் நகராட்சிக்கு உள்ளதாக முடிவு செய்யப்பட்டது.
மேலும், பேருந்து நிலையம் அமைக்கப்படும் நிலம் கட்டுமான தரம் கொண்டது என்றும், புதிய பேருந்து நிலையத்தால் ராசிபுரம் மக்களுக்கு பாதிப்பு ஏதுமில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.