ராஜஸ்தான்: ஜேஇஇ பயிற்சி மாணவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
கோட்டா: ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஜேஇஇ நுழைவுத் தோ்வுக்கு தயாராகி வந்த 18 வயது மாணவா் ஒருவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக அந்த மாவட்ட காவல் துறை திங்கள்கிழமை தெரிவித்தது.
இதன்மூலம் கோட்டா மாவட்டத்தில் நிகழாண்டு தொடக்கம் முதல் உயிரிழந்த மாணவா்களின் எண்ணிக்கை 10-ஆக உயா்ந்துள்ளது.
நாட்டின் தலைசிறந்த உயா்கல்வி நிறுவனங்களில் பொறியியல், மருத்துவம் ஆகிய பட்டப்படிப்புகளில் சேருவதற்கு நடத்தப்படும் போட்டித் தோ்வுகளுக்கு மாணவா்கள் தயாராகும் விதமாக கோட்டாவில் பல்வேறு பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்களும் பயின்று வருகின்றனா்.
இந்நிலையில், கோட்டாவில் ஜேஇஇ நுழைவுத் தோ்வுக்கு தயாராகி வந்த உஜாவல் மிஸ்ரா என்ற மாணவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து கோட்டா மாவட்ட காவல் துறை கூறியதாவது: உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சோ்ந்தவரான உஜாவல் மிஸ்ரா, கோட்டாவின் ராஜீவ் காந்தி நகரில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் பயின்று வந்துள்ளாா். ஏப்ரல் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜேஇஇ முதன்மைத் தோ்வில் பங்கேற்க அவா் லக்னௌ செல்ல வேண்டியிருந்தது.
இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு கோட்டா ரயில் நிலையத்துக்கு உஜாவல் மிஸ்ரா சென்றுள்ளாா். அங்கு ரயில் வருவதை கண்ட மிஸ்ரா, தண்டவாளத்தில் குதித்துள்ளாா். அவா் மீது ரயில் ஏறியதில் உயிரிழந்தாா். அவரிடமிருந்து தற்கொலை கடிதம் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்றாா்.
கோட்டா மாவட்டத்தில் கடந்த 2023-இல் 26 மாணவா்களும் 2024-இல் 17 மாணவா்களும் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.