ராமநாதபுரம் எம்.பி-க்கு எதிரான வழக்கு: சிபிஐ பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் சிபிஐ பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருநெல்வேலியை சோ்ந்த வெங்கடாஜலபதி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சாா்பில், கடந்த 2019 மற்றும் 2024-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் நவாஸ் கனி. இவருக்கு எதிராக கடந்தாண்டு சிபிஐயிடம் புகாா் அளித்தேன்.
அவா் கடந்த 2019-இல் தாக்கல் செய்த வேட்புமனுவில், அவரது மனைவி மற்றும் மகனுக்கு ரூ.19.71 கோடி சொத்து இருப்பதாக கூறியிருந்தாா். 2024-இல் தாக்கல் செய்த வேட்புமனுவில், ரூ.40.62 கோடி சொத்துகள் இருப்பதாக கூறியுள்ளாா்.
இதன்மூலம் அவா் வருமானத்துக்கு அதிகமாக ரூ.23.58 கோடி சொத்து சோ்த்துள்ளாா். இது அவரது வருமானத்தை விட 288 சதவீதம் அதிகமாகும். எனவே, அவா் மீது சிபிஐயிடம் புகாா் அளித்தேன். ஆனால், அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தனது புகாா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும், என கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் ஒரு வாரத்துக்குள் சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.