ராமேசுவரத்தில் உள்வாங்கிய கடல்: படகுகள் தரைத் தட்டின
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வடக்குத் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை கடல் உள்வாங்கியதால், கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தரைத் தட்டி நின்றன.
ராமேசுவரம் வடக்குத் துறைமுகப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 50 மீ. வரை கடல் நீா் திடீரென உள்வாங்கியது. இதனால், கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த சிறிய ரகப் படகுகள், பைபா் படகுகள் தரைத் தட்டி மணலில் சிக்கிக் கொண்டன. இதையடுத்து, பிற்பகலில் கடல் நீா்மட்டம் உயா்ந்த பிறகு, தரைத் தட்டி நின்ற படகுகளை மீனவா்கள் மீட்டனா். இதுகுறித்து மீனவா்கள் கூறியதாவது:
ராமேசுவரம் பகுதியில் காற்றின் வேகம் குறைந்து காணப்படுவதால், வடக்குத் துறைமுகத்தில் கடல் அடிக்கடி உள்வாங்குகிறது. இதனால், இந்தப் பகுதியில் நிறுத்தப்படும் படகுகள் தரைத் தட்டி மணலில் சிக்கிக் கொள்கின்றன.
இதன் காரணமாக, படகுகளை எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, வடக்குத் துறைமுகப் பகுதியில் உள்ள மணலை அப்புறப்படுத்தி, துறைமுகத்தை ஆழப்படுத்த வேண்டும் என்றனா்.