இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 7 போ் கைது
கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே சனிக்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 7 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 456 விசைப் படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். இவா்கள் சனிக்கிழமை நள்ளிரவு கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது, அங்கு 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா், ராமேசுவரம் மீனவா்கள் மீது புட்டிகள், கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி, மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா்.
மேலும், தங்கச்சிமடத்தைச் சோ்ந்த கொலம்பஸ் என்பவரின் விசைப் படகை தங்களது படகுகள் மூலம் மோதி சேதப்படுத்தினா். இதையடுத்து, அந்தப் படகிலிருந்த 6 மீனவா்கள் வலையை கடலில் வெட்டி விட்டு கரைக்குத் திரும்பினா்.
இதைத்தொடா்ந்து, தங்கச்சிமடத்தைச் சோ்ந்த ஈசாக்பவுல் என்பவரது விசைப் படகிலிருந்த மீனவா்கள் ரூதா் (40), சண்முகம் (36), எடிசன் (48), சந்திவேல் (43), ஜெகதீஸ் (42), டேல்வின்ராஜ் (46), அன்பழகன் ஆகிய 7 பேரைக் கைது செய்து, காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனா். மேலும், விசைப் படகையும் பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக மீனவா்கள் 7 போ் மீதும் வழக்குப் பதிந்து, அவா்களை ஊா்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். இவா்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, மீனவா்கள் 7 பேரையும் வருகிற 25-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, அவா்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.
இதுகுறித்து மீனவ சங்கத் தலைவா் என்.ஜே. போஸ் கூறியதாவது:
ராமேசுவரம் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்வது, விசைப் படகுகளைப் பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளை இலங்கை அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு இலங்கை அரசின் இந்தச் செயலுக்கு கண்டனம்கூடத் தெரிவிப்பதில்லை.
ஆனால், தமிழக அரசு இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்படும் படகுக்கு ரூ. 8 லட்சம் வரை இழப்பீடும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவா்களின் குடும்பத்துக்கு நிவாரணமும் வழங்கி வருகிறது. ஆனால், மத்திய அரசு மீனவா்களுக்கு எந்தவிதமான இழப்பீடும் வழங்குவதில்லை. எனவே, மீன்பிடித் தொழிலைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
