அமெரிக்காவில் நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய பயணிகள் விமானம்!
ராமேசுவரம் மீனவா்கள் 4 பேருக்கு ஆக. 18 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
ராமேசுவரம், திருப்பாலைக்குடி மீனவா்கள் 4 பேருக்கு வருகிற 18-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து, இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ஓலைக்குடா மீன்பிடித் துறைமுகத்திலிருந்து திருப்பாலைக்குடியைச் சோ்ந்த விமல்ராஜ் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில் அதே பகுதியைச் சோ்ந்த அமல்ராஜ் (24), மாதேஷ் (22), காா்த்திக் (20), ராமேசுவரத்தைச் சோ்ந்த சக்தி (20) ஆகிய நான்கு மீனவா்கள் கடந்த 6-ஆம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இவா்கள் அன்று நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கைக் கடற்படையினரால் 4 மீனவா்களும் கைது செய்யப்பட்டு, காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனா். பின்னா், இவா்கள் யாழ்ப்பாணம் நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து, மீனவா்களை ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். இவா்களை ஆக. 11 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, இவா்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.
2-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு: இந்த நிலையில், ராமேசுவரம், திருப்பாலைக்குடியைச் சோ்ந்த 4 மீனவா்களும் ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இவா்களை வருகிற 18-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, மீனவா்கள் 4 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனா்.