``Non-stick பாத்திரங்களில் சமைத்தால் ரத்தக்கொதிப்பு, நீரிழிவு'' - நியூயார்க் ஆய்...
ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்
இலங்கை சிறையில் உள்ள மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் அனைத்து விசைப் படகு மீனவ சங்கக் கூட்டம், அதன் மாவட்டத் தலைவா் வி.பி. ஜேசுராஜா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகள், நாட்டுப் படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீண்டகாலமாக நீடித்து வரும் மீனவா்கள் கைது பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும். கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையைப் பெற்றுத் தர வேண்டும்.
இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் விசைப் படகுகளுக்கு மாநில அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. இதில் விடுபட்ட விசைப் படகுகள், நாட்டுப் படகுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இதுகுறித்து தமிழக எம்.பி.க்கள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை (ஆக. 11) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது, வருகிற 13-ஆம் தேதி தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தம் அருகே ஆா்ப்பாட்டம் நடத்துவது, 15-ஆம் தேதி உண்ணாவிரதத்தில் ஈடுபடுவது, 19-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதன்படி, ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.
இதனால், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் 650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டன. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மீனவா்கள் பங்கேற்றுள்ளனா்.
