ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிசிஐடி-க்கும் மாற்ற கோரிக்கை
அவிநாசி இளம்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் காவல் துறை விசாரணையை தாமதப்படுத்துவதால், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென அவரது தரப்பு வழக்குரைஞா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
திருமணமாகி சில மாதங்களில் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவா் கவின்குமாா் கைது செய்யப்பட்டாா். இந்நிலையில் கவின்குமாா் தரப்பில் பிணை கேட்டு, திருப்பூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அவருக்கு பிணை வழங்கக் கூடாது எனக் கோரி ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, அவரது வழக்குரைஞா் மோகன் ஆகியோா் திருப்பூா் நீதிமன்றத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்த வழக்கின் விசாரணையில் நிறைய தொய்வு உள்ளது. தற்கொலை வழக்காக மட்டுமே பதிவு செய்துள்ளனா். முதல் தகவல் அறிக்கையும் மாற்றப்பட்டதாகக் கூறுகின்றனா். அது குறித்த விவரம் தரவில்லை. காவல் துறை வழக்கு விசாரணையை தாமப்படுத்துகிறது. 3-ஆவது குற்றவாளியான கவின்குமாரின் தாய் சித்ராதேவியை போலீஸாா் அழைத்துச் சென்று விடுவித்ததாக கூறப்படுகிறது. எனவே 3-ஆவது குற்றவாளியை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால்தான் முழு விவரம் தெரியவரும்.
புகாா்தாரா் கொடுக்கும் முழு விவரங்களை போலீஸாா் எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறாா்கள். இந்த வழக்கு தொடா்பாக வருவாய் கோட்டாட்சியா் விசாரணையும் நடைபெற்று வருகிறது. வரதட்சணை கொடுமை நடந்து இருக்கிறது. உடற்கூறாய்வு அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை. கைதான குற்றவாளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் சிறையில் ஏற்படுத்தி தருகின்றனா். இது தொடா்பாக சிறைத் துறையினா்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த வழக்கு தொடா்பாக சிபிசிஐடி விசரணைக்கு உத்தரவிட வேண்டுமென தெரிவித்தனா்.