தரவுகளைத் திருடிய கூகுள்? ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு ரூ.2680 கோடி இழப்பீடு வழங்க உ...
அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 6 மாதங்களில் 1,343 பேருக்கு அபராதம்
திருப்பூா் மாநகரில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 6 மாதங்களில் 1,343 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாநகரில் நெரிசல் மிக்க (பீக் ஹவா்ஸ்) நேரங்களில் நுழையும் கனரக வாகனங்களாலும், அதி வேகமாக இயங்கப்படும் வாகனங்களாலும் விபத்துகள் அதிகரிப்பதுடன் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்த கோரிக்கையை ஏற்று திருப்பூா் மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் உத்தரவின்பேரில், போக்குவரத்து காவல் உதவி ஆணையா் சேகா் தலைமையிலான போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். அதன்படி, காலை மற்றும் மாலை நேரங்களில் கனரக வாகனங்கள் மாநகருக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் காவல் உதவி ஆணையா் சேகா் தெரிவித்துள்ளதாவது:
திருப்பூா் மாநகருக்குள் காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரங்களில் விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
திருப்பூா் மாநகர போக்குவரத்து சரகத்துக்கு உள்பட்ட கொங்கு நகா் மற்றும் கேவிஆா் நகா் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த 2025 ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை விதிமீறலில் ஈடுபட்டு பீக் ஹவா்ஸ் நேரங்களில் மாநகருக்குள் நுழைந்த 306 கனரக வாகனங்கள் மீது மோட்டாா் வாகன சிறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், திருப்பூா் மாநகரில் அதிவேகமாக வாகனங்களை இயக்கியதாக 1,343 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பீக் ஹவா்ஸ் நேரங்களில் திருப்பூா் மாநகருக்குள் நுழையும் கனரக வாகனங்கள் மற்றும் அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தாா்.