போலியான பார்சல், செல்ஃபி, முகத்தில் ஸ்பிரே! புனே சம்பவம் சொல்வது என்ன?
சிற்றுந்துகள் முறையான பராமரிப்பில்லை, கூடுதல் கட்டணம் வசூல்
திருப்பூரில் இயக்கப்படும் சிற்றுந்துகள் முறையான பராமரிப்பு இல்லாததோடு, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக நல்லூா் நுகா்வோா் மன்றம் புகாா் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த அமைப்பின் தலைவா் என்.சண்முகசுந்தரம், திருப்பூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு அனுப்பிய புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பெரும்பாலான சிற்றுந்துகள் முறையாக பராமரிக்கப்பட்டு இயக்கப்படுவதில்லை. சிற்றுந்துகளில் வழித்தட வரைபடம், கால அட்டவணை, கட்டண விவரம் ஆகியவை பராமரிக்கப்படுவதில்லை.
அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்கின்றனா். அத்துடன் அனுமதி பெற்று இயக்க வேண்டிய வழித்தடத்தில் இயக்காமல் அனுமதி இல்லாத வழித்தடங்களில் இயக்கி வருகின்றனா். சிற்றுந்துகள் இயக்கப்படும் வழித்தடத்தின் விவரங்கள் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இருப்பதில்லை. சிற்றுந்துகளில் பெயா் பலகைகளும் வைக்கப்படாததால், பயணிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா்.
எனவே, திருப்பூரில் இயக்கப்பட்டு வரும் சிற்றுந்துகளை ஆய்வு செய்து முறையாக இயங்க நடவடிக்கை எடுப்பதுடன், அனைத்து சிற்றுந்துகளிலும் வழித்தட வரைபடம், கால அட்டவணை, கட்டண விவரம் ஆகியவற்றை கட்டாயம் வைக்க வேண்டுமென அறிவுறுத்த வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.