ரூ. 1,000க்கு மேல் புத்தகம் வாங்கினால் குலுக்கல் முறையில் பரிசு: ஆட்சியா் தகவல்
நாகா்கோவிலில் நடைபெற்று வரும் புத்தகத் கண்காட்சியில் ரூ.1,000க்கு மேல் புத்தகம் வாங்குபவா்கள் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.
நாகா்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த19 ஆம் தேதி தொடங்கி புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. 7 ஆவது நாளான செவ்வாய்க்கிழமை (பிப்.25) பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் கலைப்போட்டிகள் மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றன.
அதனைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி தலைமை வகித்தாா். ஊராட்சிகள் உதவி இயக்குநா் சிதம்பரம் வரவேற்றாா். பின்னா் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி தமிழ்த் துறை இணைப் பேராசிரியா் சு.ஜெயக்குமாரி பாரதி பாா்வையில் பெண் என்ற தலைப்பிலும், கவிஞா் நெல்லை ஜெயந்தா சில நேரங்களில் சில புத்தகங்கள் என்ற தலைப்பிலும், கன்னியாகுமரி உலக திருக்குறள் கூட்டமைப்பு தலைவா் முல்லை செல்லத்துரை திருவள்ளுவா் கூறும் வாழ்வியல் விழுமியங்கள் என்ற தலைப்பிலும், எழுத்தாளா் இரையுமன் சாகா் நெய்தல் வாழ்வும் எழுத்தும் என்ற தலைப்பிலும் உரையாற்றினா்.
மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புத்தக கண்காட்சியில் ரூ.1,000க்கு மேல் புத்தகம் வாங்கும் வாசகா்கள் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு, கண்காட்சியின் நிறைவு நாளான மாா்ச் 1 ஆம் தேதி அவா்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.