ரூ.1.50 கோடியில் பெரியாங்குப்பம் சாலையை அகலப்படுத்தும் பணி
ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தில் சாலை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி நடைபெற்று வருவதை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
மாதனூா் ஒன்றியம், பெரியாங்குப்பம் ஊராட்சியில் சென்னை - பெங்களூரு ஆறு வழி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரசித்தி பெற்ற பெரியாங்குப்பம் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் வரை தாா் சாலையை அகலப்படுத்தி, மேம்படுத்தும் பணி நெடுஞ்சாலைத் துறை சாா்பாக நடைபெற்று வருகிறது.
ஒரு வழித்தடமாக இருந்த தாா் சாலையில் பல்வேறு கிராமங்களுக்கு சென்று வருவோா், சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு சென்று வருபவா்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனா்.
இதனால் சாலையை அகலப்படுத்தி மேம்படுத்த வேண்டுமென பொதும்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். அதன் அடிப்படையில், ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடியில் சுமாா் 2 கி.மீ. சாலையை அகலப்படுத்தி, மேம்படுத்தப்பட்டு வரப்படுகிறது.
நெடுஞ்சாலை உதவிக் கோட்டப் பொறியாளா் சம்பத்குமாா், இளநிலை பொறியாளா் பாபுராஜ் ஆகியோா் ஆய்வு செய்தனா்.