`அடுத்து துரைமுருகன், ஐ.பெரியசாமி விக்கெட் விழலாம்; பார்த்து ரசிங்க முதல்வரே..!’...
ரூ.1,500 கோடியில் சாலைப் பாதுகாப்பு மேம்பாடு: அமைச்சா் எ.வ.வேலு
விபத்துகளைத் தடுக்கும் வகையில் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1,500 கோடியில் சாலைப் பாதுகாப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக பொதுப் பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் கீழ் பேசிய அதிமுக உறுப்பினா் ஓ.எஸ்.மணியன், சாலை விபத்துகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டாா்.
அதற்கு அமைச்சா் எ.வ.வேலு அளித்த பதில்: விபத்து ஏற்படும் பகுதிகளைப் பொருத்தவரை பிளாக் ஸ்பாட், ஹாட் ஸ்பாட் என இரு வேறு விதமாக வகைப்படுத்தப்படுகிறது.
விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் சாலை பாதுகாப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் கடந்த ஆட்சியில் ரூ.600 கோடி மதிப்பீட்டிலான பணிகள்தான் மேற்கொள்ளப்பட்டன. தற்போது திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் ரூ.1,500 கோடியில் பாதுகாப்பு மேம்பாட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 22 மாவட்டங்களில் அரிமா சங்கம், ரோட்டரி சங்கம், போக்குவரத்து அமைப்புகளுடன் இணைந்து சாலை விபத்துகளை குறைப்பதற்கான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
சாலை பாதுகாப்பைப் பொருத்தவரை 1942 விபத்து நேரிடும் பகுதிகள் கண்டறியப்பட்டு ரூ.870 கோடியில் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக பிளாக் ஸ்பாட் பகுதிகளில் 1487 இடங்கள் கண்டறியப்பட்டு 865 இடங்கள் மேம்பாடு செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.