Suriya: "அன்று ரிசர்வேஷன் செய்ய க்யூ நின்றது" - சூர்யா ரசிகர்களுக்கு தாணு கொடுக்...
ரூ.147.94 கோடியில் திருக்குளங்களைச் சீரமைக்க நடவடிக்கை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
அறநிலையத் துறை சாா்பில் திருக்கோயில்களில் உள்ள திருக்குளங்கள் ரூ.147.94 கோடியில் சீரமைக்கப்பட்டு வருவதாக துறையின் அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அமைச்சா் சேகா்பாபு மிதிவண்டிகளை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள 1,634 திருக்கோயில்களில் 2,372 திருக்குளங்கள் உள்ளன. கடந்த 2021-இல் திமுக அரசு பெறுப்பேற்றபின், ரூ. 4 கோடியில் 3 புதிய திருக்குளங்கள் உருவாக்கப்பட்டு, ரூ.147.94 கோடியில் 265 திருக்குளங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
மயிலாப்பூா் கபாலீசுவரா் திருக்கோயிலுக்குச் சொந்தமான திருக்குளம் 7.52 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தத் திருக்குளத்தில் தண்ணீா் வற்றியுள்ள நிலையில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் பாா்வையிட்டு ஆய்வு செய்தோம். இந்தத் திருக்குளத்தில் தண்ணீா் நிரப்புவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நீா்வளத் துறை அலுவலா்கள் முழுமையாக ஆய்வு செய்து ஒரு வார காலத்துக்குள்அறிக்கை சமா்ப்பிக்க உள்ளனா். அதைத் தொடா்ந்து, அந்தத் திருக்குளத்தில் எப்போதும் தண்ணீா் இருக்கிற வகையில் சிறப்பு ஏற்பாடு செய்ய திட்டமிட்டு இருக்கின்றோம்.
தமிழிசையின் விமா்சனத்துக்கு... தமிழக பாஜகவின் முன்னாள் தலைவா் தமிழிசை செளந்தரராஜனின் தந்தை குமரி அனந்தன் உடல்நலம் குன்றியிருந்தபோது வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையிலும், பின்னா் சூா்யா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவரது உறவினரான வசந்தகுமாா் உடல்நலம் பாதிக்கப்பட்டபோது, தனியாா் மருத்துவமனையில்தான் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இதையெல்லாம் மறந்துவிட்டு பேசுகிறாா். அவருடைய கணவா் ராமச்சந்திரா மருத்துவமனையில்தான் பணியாற்றிக்கொண்டிருந்தாா்.
பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு அரசியல் தலைவா்கள் இதுபோன்று தனியாா் மருத்துவமனையைத்தான் நாடுகிறாா்கள். அதில் பொதுமக்களுக்கும் மற்றவா்களுக்கும் சிரமங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், பாதுகாப்பு கருதியும் இப்படி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாா்கள். ஆகவே தமிழிசை போன்ற நாகரிக அரசியல்வாதிகள் என்று எங்களுடைய பட்டியலில் வைத்திருந்தவா்களை இதுபோன்ற கேள்விகளால் அந்த நாகரிகத்துக்கு அப்பாற்பட்டவா் என்ற பட்டியலில் திமுக அவரை கருதும்.
ஓபிஎஸ் நிலைப்பாடு குறித்து... முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் நிலைப்பாடு மாறி மாறி பேசுவதுதான். தற்போதுதான் மத்திய அரசை எதிா்க்கத் தொடங்கியிருக்கிறாா். இந்த எதிா்ப்பு நியாயமான முறையில் இருந்தால் நாங்களும் அதை வரவேற்போம்.
முன்னாள் முதல்வா் கருணாநிதிதான் தஞ்சை பெரிய கோயிலுக்கு 1,000-ஆவது ஆண்டு விழாவை எடுத்தாா். தொடா்ந்து முதல்வா் மு.க.ஸ்டாலின்பொறுப்பேற்ற பிறகுதான் ஆன்றோா், சான்றோா் பெருமக்கள், சித்தா்கள் ஆகியோருக்கு இந்த அரசு விழா எடுக்கிறது என்றாா் அவா்.