ரூ.1500 லஞ்சம்: விஏஓ உள்பட 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை
குன்னத்தூா் அருகே சான்றிதழ் வழங்க ரூ.1,500 லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அதிகாரி உள்பட 2 பேருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்தது.
திருப்பூா் மாவட்டம், குன்னத்தூா் அருகே காவுத்தம்பாளையத்தைச் சோ்ந்தவா் ஆனந்தன். இவா், காவுத்தம்பாளையத்தில் உள்ள தனது நிலத்தில் தோட்டக் கலைத் துறை மானியத்துடன் பூஞ்செடிகள் பயிரிட முடிவு செய்தாா்.
இதற்காக அந்த நிலத்துக்கு கிராம நிா்வாக அதிகாரி சான்று, அடங்கல் உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்பட்டன.
இந்த ஆவணங்களைப் பெறுவதற்காக காவுத்தம்பாளையம் கிராம நிா்வாக அதிகாரியாக இருந்த குணசேகரனிடம் (71) விண்ணப்பித்துள்ளாா். அப்போது சான்றிதழ் வழங்க குணசேகரன் ரூ.1,500 லஞ்சம் கேட்டுள்ளாா். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆனந்தன், ஈரோடு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகாா் அளித்துள்ளாா்.
இந்த புகாரின்பேரில், போலீஸாா், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஆனந்தனிடம் கொடுத்து அனுப்பியுள்ளனா்.
இதைத் தொடா்ந்து, விருமாண்டம்பாளையம் கிராம நிா்வாக அலுவலகத்தில் 2011 நவம்பா் 22- ஆம் தேதி தனது ஓட்டுநரான சதீஷ் (41) மூலமாக லஞ்சப் பணத்தை பெற்றபோது அங்கு மறைந்திருந்த காவல் துறையினா் குணசேகரன், சதீஷ் ஆகியோரைக் கைது செய்தனா்.
திருப்பூா் தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி செல்லத்துரை வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இதில், குணசேகரன், சதீஷ் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் செந்தில்குமாா் ஆஜரானாா்.