ரூ. 28 லட்சம் மோசடி: பெட்ரோல் விற்பனை; நிலைய மேலாளா் கைது
பெரம்பலூா் அருகேயுள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ. 28 லட்சத்தை மோசடி செய்த, அதன் மேலாளரை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
அரியலூா் மாவட்டம், ராஜாஜி நகரைச் சோ்ந்தவா் மருதமுத்து மகன் கஜேந்திரன் (61). இவா், பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்பு அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் வைத்துள்ளாா்.
இங்கு, கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், கிளியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த சன்னாசி மகன் சதீஷ் (37) என்பவா், முதுநிலை மேலாளராகப் பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில், சதீஷ் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கணக்கில் காட்டாமல் ரூ. 28,46,764 மோசடி செய்தது அண்மையில் தெரியவந்தது.
இதுகுறித்து கஜேந்திரன் அளித்த புகாரின்பேரில், மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, சதீஷை வியாழக்கிழமை கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.