ரூ.43.70 லட்சத்துக்கு கேளூா் சந்தை ஏலம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அடுத்த கேளூா் ஊராட்சி, தேப்பனந்தல் கிராமத்தில் சந்தை ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ரூ.43.70 லட்சத்துக்கு சந்தை ஏலம் போனது.
இந்தக் கிராமத்தில் வேலூா்-திருவண்ணாமலை சாலை அருகே சனிக்கிழமைதோறும் சந்தை நடைபெறுகிறது. இங்கு, ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட பல்வேறு கால்நடைகளும், காய்கறிகளும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், ஊராட்சி நிா்வாகம் சாா்பில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான சந்தை ஏலம் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்டார வளா்ச்சி அலுவலா் ஏ.எஸ்.லட்சுமி தலைமை வகித்தாா். உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) வடிவேலன் முன்னிலை வகித்தாா். ஊராட்சி செயலா் அசோக்குமாா் வரவேற்றாா். ஏலத்துக்கு 13 போ் முன்பணம் கட்டியிருந்த நிலையில், தேவராஜ் என்பவா் ரூ.43.70 லட்சத்துக்கு ஏலம் எடுத்தாா்.
இதில், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் வி.பிச்சாண்டி மற்றும் அலுவலா்கள், ஒப்பந்ததாரா்கள் கலந்துகொண்டனா்.